தமிழக அரசியலில் களம் இறங்கி முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி. இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதனால் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் த.வெ.க. தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் இன்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அதன்படிி விருகம்பாக்கம் தொகுதியின் த.வெ.க. வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். முதலில் விஜயின் ஓட்டுநராக இருந்த ராஜேந்திரன் தற்போது அவரது நிழலாக இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் ஒருசிலருக்கு மட்டும் விஜய் இடம்கொடுத்து வைத்திருக்கிறார். அவர்களில் ஒருவர் ராஜேந்திரன்.
அந்த வகையில் ராஜேந்திரன் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரது மகன் சபரிநாதனுக்கு விஜய் வாய்ப்பளித்துள்ளார். தன் சார்பில் தனிப்பட்ட முறையில் விஜய் தேர்வு செய்த வேட்பாளர்களில் ஒருவராக சபரிநாதன் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேடைக்கு தந்தையுடன் சென்று விஜய்யை சந்தித்த போது சபரிநாதன் கண்கலங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்படுகிறது.