கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் வைக்கப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
அந்த நூலகத்தை சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். நூலகத்தை கட்டியதற்காக கோவையில் அவருக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து இருப்பதாக, அந்த நூலகத்துக்கான புத்தகங்களை வாங்குவதற்கான பரிந்துரை குழுவில் இடம்பெற்று இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். பெருமாள் முருகனின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலிலும், இலக்கிய உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இச்சம்பவத்தில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்து நீதி நிலைநாட்டப்படும் என கூறியிருந்தார்.
பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள ஊழல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் வைக்கப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணைக்கு பிறகு இவ்வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.