திருமாவளவன் பயன்படுத்திய கார் 
தமிழக செய்திகள்

சர்ச்சைக்குரிய TN.07 CM-2031 கார்: திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படப்பிடிப்பு வாடகை கார்- விடுதலை சிறுத்தை கட்சி விளக்கம்

காலத்தின் தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்று சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போபவர்கள் அல்ல.

சர்ச்சைக்குரிய TN.07 CM-2031 கார் புகைப்படம் வைரலான நிலையில், அது திருமாவளவன் சொந்த வாகனமல்ல, சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் என விடுதலை சிறுத்தை கட்சி விளக்கம் அளித்துள்ளது. “திருமா 35 - சமூக நீதியின் சகாப்தம்” என்ற நிகழ்ச்சிக்காக, படக்குழு எதிர்கால ஆளும் கட்சி சுட்டிக்காட்டும் வகையில் அந்த எண் பலகையை வடிவமைத்ததாக கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டி.என். 07 சி.எம். 2031 என்ற பதிவு எண் கொண்ட காரில் செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

கோட் சூட்டுடன் திருமாவளவன் அந்த காரில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தது அரசியல் களத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் “திருமா 35 - சமூக நீதியின் சகாப்தம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பூந்தமல்லி ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கூரை திறக்கப்பட்ட வாகனத்தில் திருமாவளவன் வரும்போது எடுக்கப்பட்டது அந்த படம். படப்பிடிப்பு தளத்தில் படம் பிடிக்கப்பட்ட அந்த வாகன எண் குறித்து வன்மத்தை நெஞ்சில் நிறுத்தி மலிவு அரசியல் மனநிலையோடு காழ்ப்புணர்ச்சியை கக்குகின்றனர். அவரை வைத்து படம் பிடிக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகும்.

“ஆளும் கட்சியாக வி.சி.க.” என்கிற எதிர்கால திசைப்புள்ளியை வெளிப்படுத்த படப்பிடிப்பு குழுவினர் டி.என்.07 சி.எம். 2031 என வாகன எண் வடிவமைத்து இருந்தனர்.

படப்பிடிப்பில் இடம்பெறும் காட்சிகள் பயன்படுத்திய காரின் ரகம், அதனுடைய எண் ஆகியவை குறித்து திருமாவளவனுக்கு தெரியாது. நிகழ்ச்சி நடத்திய குழுவே அதனை இறுதி செய்தது. இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புலம்புகின்றனர். திருமாவளவன் சி.எம்.என பதித்த காரில் வருவதையே தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்கம்போல் அவதூறு பரப்புகின்றனர்.

இன்று தீர்மானித்தது போல் நாளைய தமிழகத்தின் அரசியல் திசை வழியை மக்கள் தீர்மானிக்கும். அதை உளப்பூர்வமாக உள்வாங்குவது தான் திருமாவளவன். காலத்தின் தீர்ப்பை பெருமகிழ்ச்சியோடு வரவேற்று சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போபவர்கள் அல்ல. எனவே தமிழின மேம்பாட்டின் மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இத்தகைய கொடும் சிந்தனையாளர்களை கண்டிப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT