இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5½ மணிக்கு அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் சுந்தரமூர்த்தி நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டிட புனரமைப்பு பணியில் ‘சிஜிரானை வரிசைக்கல்’ தொடக்க விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அதன்பிறகு இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கார் மூலமாக புறப்பட்டு அவர் கோவை செல்கிறார்.
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மதியம் 1 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழிகள் மற்றும் வருகைபுரியும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.