வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு
தமிழக செய்திகள்

3 நாட்களில் 97,263 வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை

பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு உள்பட 10 பொருட்கள் கொண்ட தொகுப்பு.

கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” ரூ.100 என்ற சிறப்பு விலையில் 05.11.2026 முதல் 07.11.2026 வரை மூன்று நாட்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள்

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வாயிலாக காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இத்தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேங்காய் ஆகிய 10 வகையான காய்கறிகள் மொத்தம் சுமார் 2.55 முதல் 2.60 கிலோ எடையில் அடங்கியுள்ளன. த்தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

86,217 காய்கறித் தொகுப்புகள் விற்பனை

இத்திட்டத்தின் கீழ், 05.11.2026 அன்று வரை 22,502 காய்கறித் தொகுப்புகளும், 06.11.2026 அன்று 31,567 காய்கறித் தொகுப்புகளும், 07.11.2026 அன்று 32,148 தொகுப்புகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த மூன்று நாட்களில் 2,24,164 கிலோகிராம் எடையுள்ள 86,217 காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களின் சார்பில் 57 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் மூலம் 28,720 கிலோகிராம் எடையுள்ள 11,046 காய்கறித் தொகுப்புகளை எடுத்துச் சென்று 132 விற்பனை மையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தரமான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்குவதையும், பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கிடைப்பதையும் உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வரும் இத்தகைய மக்கள் நலத் திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT