தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு' 100 ரூபாய் சலுகை விலையில் சென்னையில் 3 நாட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வழங்க கூட்டுறவுத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய 'வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ' 100 ரூபாய் சலுகை விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த காய்கறி தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், எலுமிச்சை, இஞ்சி, தேங்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் மூலம் சென்னையில் மட்டும் நாளை முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் காய்கறிகளை பிரித்து தனித்தனியாக வழங்கப்பட மாட்டாது தொகுப்பாகத்தான் கிடைக்கும். இந்த காய்கறி தொகுப்பை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கொண்டு தொடங்கி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பில் உள்ள காய்கறிகள் மற்றும் அளவு வருமாறு :-
வ. எண். காய்கறியின் பெயர் அளவு
1 பெரிய வெங்காயம் 500 கிராம்
2 தக்காளி 500 கிராம்
3 கத்தரிக்காய் 250 கிராம்
4 உருளைக்கிழங்கு 250 கிராம்
5 கேரட் 200 கிராம்
6 பீன்ஸ் 200 கிராம்
7 பச்சை மிளகாய் 100 கிராம்
8 எலுமிச்சை 100 கிராம்
9 இஞ்சி 50 கிராம்
10 தேங்காய் 400-450 கிராம்
மொத்தம் 2550 -2600 கிராம்
மேற்கண்ட காய்கறிகளின் எண்ணிக்கை மற்றும் அளவில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. ஒவ்வொரு காய்கறியும் குறிப்பிட்ட எடைக்கு குறையாமல் இருக்க வேண்டும். தேங்காய் 400 கிராம் முதல் 450 கிராம் எடைக்கு குறையாமல் வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.