சென்னை:
2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது.
இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின் படி த.வெ.க.வினர் தீவிர களப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
த.வெ.க. சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் முடிவடைந்து பட்டியல் தயார் நிலையில் உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் நேர்காணலை 2 கட்டமாக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நடத்தி வேட்பாளர்களிடம் அடுத்ததாக உங்களை நான் எம்.எல்.ஏ.வாகதான் பார்ப்பேன் என வாழ்த்து தெரிவித்தார்.
இறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியல் 2 கட்டமாக இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
த.வெ.க. சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மற்றும் ஆவணங்கள் சரி பார்ப்பு பணி சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இன்று நடந்தது.
இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட த.வெ.க. வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஐ.டி. லிங்கை சேர்ந்த ஒருவர் லேப் டாப்புடன் பணியமர்த்தப்பட்டனர்.
ஒவ்வொரு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அங்குல அங்குலமாக அலசி ஆராய்ந்து எந்தவித “பிழை”யும் இடம்பெறாத வண்ணம் தீவிரமாக சரி பார்க்கப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் மாலை வரை இந்த சரி பார்ப்பு பணிகள் நடந்தது.