தமிழக செய்திகள்

சவுமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட கூறியதால் வெளியேறினேன்- வேல்முருகன் எம்.எல்.ஏ. திடீர் குற்றச்சாட்டு

10 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ., நெய்வேலியில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால், ‘சீட்' கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது.

அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேமரா சின்னம் ஒதுக்கியது. இந்நிலையில், பண்ருட்டியில் வேல்முருகன் போட்டியிட உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 3-ந்தேதி பண்ருட்டியில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் வெளியாகும் என்று நிர்வாகிகள் கூறினர்.

இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் தொகுதி செயலாளர் சுரேந்தர் தலைமையில் நடந்தது. தொகுதி பார்வையாளர் திருபுவனம் சக்கரவர்த்தி உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக போட்டியிட்ட போதேல்லாம் வெற்றி பெற்றுள்ளேன். பண்ருட்டி தொகுதி அரசு விழாக்களில் கூட தி.மு.க. 2- ம் கட்ட தலைவர்களை வைத்து பண்ருட்டியில் தி.மு.க.தான் போட்டியிட வேண்டும் என பேசினர். அமைச்சர் உள்ளிட்டோர் சிரித்து, ரசித்து வேடிக்கை பார்த்தனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போதும் அரசு விழாக்களில் எனது பெயர் போடுவதில்லை. படம் போடுவதில்லை. நானும் வி.சி.க. தலைவர் திருமாவளவனும் சேர்ந்து வன்னியர்,– பறையர் சமுதாயத்தினர் ஒன்றுபட்டு வாழ முயற்சித்து வந்தேன். நான் நின்ற தொகுதியை வி.சி.க. வுக்கு ஒதுக்கி சண்டை மூட்ட தி.மு.க. நினைக்கிறது. எனக்கு இங்கு சீட் இல்லையாம். சவுமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்கின்றனர். நான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் பா.ம.க.வில் இருந்து வந்தவன் என்பதால் என்னை அக்கட்சியுடன் போட்டியிட தி.மு.க. அமைச்சர் ஒருவரே கூறுகிறார். அதனால் தான் நான் சீட் வேண்டாம். 10 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. ஒரு சீட்டு, 2 சீட்டிற்காக மற்ற கட்சிகளிடம் நிற்க வேண்டியதில்லை. நம்முடன் 40 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் போட்டியிட போகிறோம். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். 5 ஆண்டு எனக்கு அவகாசம் கொடுங்கள்.

பண்ருட்டி தொகுதி வேட்பாளர் 24மணிநேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து, அறிவிப்பேன். இந்த தேர்தலில் பேசுபொருளாக உள்ள டி.வி.கே. நிலை முடிந்து, அடுத்தத் தேர்தலில் நம்ம டி.வி.கே. பேசுபொருளாக இருக்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.40 லட்சம் வரை செலவு என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. எங்கள் கட்சி வேட்பாளருக்கு ரூ.4 லட்சம் மட்டுமே செலவு மற்ற பணிகளை எங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி களத்தில் இறங்கி வேலை செய்வார்கள்.

இவ்வாறு வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.