தமிழக செய்திகள்

வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரெயில் சேவைக்கு அமோக வரவேற்பு

பரங்கிமலை ரெயில் நிலையம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்வதால் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை:

வேளச்சேரி-பரங்கி மலை இடையே பறக்கும் மின்சார ரெயில் சேவை தொடங்கி 42 நாட்களை கடந்த நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்போது பறக்கும் ரெயிலில் பயணிக்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் உள்ள புழுதிவாக்கம் நிலையத்தில் மின் தூக்கி, நகரும் படிக்கட்டு போன்ற வசதிகளை கொண்டு வர வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்னையின் பொது போக்குவரத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்ட்ரல், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.

சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரெயில் தடத்தின் விரிவாக்கமாக வேளச்சேரி- பரங்கிமலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 14-ந்தேதி பரங்கிமலைக்கு ரெயில் சேவை தொடங்கியது.

இந்த வழித்தடம் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பேரூதவியாக உள்ளது. இந்த தடத்தில் ஆரம்பத்தில் தினசரி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் பயணித்தனர். இது படிப்படியாக அதிகரித்து தற்போது தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். பரங்கிமலை ரெயில் நிலையம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்வதால் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ரெயில் சேவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.