பரனூர் சுங்கச்சாவடியில் தானியங்கி சுங்க கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டதால், வாகனங்கள் நிற்காமல் சுங்க கட்டணம் செலுத்த முடிகிறது. பாஸ்ட் டிராக் அடையாள அட்டையை ஸ்கேன் செய்யும் நவீன தொழில்நுட்பம் மூலம், போக்குவரத்து நெரிசல் குறைந்து, நேரம் மிச்சமாகிறது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி. சாலை மிக முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை வழியாகத்தான் லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன.
செங்கல்பட்டு அருகே உள்ள பரனுர் சுங்கச்சாவடி ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இரவு- பகலாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்த சுங்கச்சாவடி தான் வாகனங்கள் அது அதிக அளவில் காத்து நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டது.
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இந்த சுங்கச்சாவடியை கடந்த செல்வது எளிதல்ல. நீண்ட வரிசையில் காத்து நின்று கடந்து செல்லும் நிலை இதுவரையில் இருந்தது.
கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒவ்வொரு வாகனமும் இந்த சுங்க சாவடியை கடந்து செல்லும். இதனால் கால விரயம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே 7வதாகவும் தமிழகத்தில் முதலாவதாகவும் பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டண வசூல் முறையில் புதிய தொழில் நுட்பம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது.
இந்த புதிய முறையில் பாஸ்ட் டிராக் அடையாள அட்டை மற்றும் வாகன பதிவு எண் ஆகியவற்றை விரைவாக அடையாளம் கண்டு ஸ்கேன் செய்யப்பட்டு வாகன உரிமையாளர் வங்கி கணக்கிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போது உள்ள நடைமுறையில் சுங்கச்சாவடியில் வாகனம் உள்ள கதவு மூடப்படும், அங்குள்ள கேமரா மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ஸ்கேன் செய்ய முடியாத நிலையில் அங்குள்ள ஊழியர் கையில் உள்ள ஸ்கேனர் மூலம் வாகன எண் மற்றும் பாஸ்ட் டிராக் அட்டையை ஆய்வு செய்த பின் கட்டணம் பிடிக்கப்படும். அதன் பின்னரே வாகனம் வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் சுங்கச்சாவடிக்குள் வாகனங்கள் வருவதற்கு 50 மீட்டர் தூரத்திற்கு முன்னே வாகன எண் மற்றும் பாஸ்ட் டிராக் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து உடனடியாக கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்காக சென்னை மார்க்கத்தில் இருந்து செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் திருச்சி மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை ஆய்வு செய்ய நவீன கருவிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கு வாகனங்கள் வந்தவுடன் தானியங்கி கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு தடையில்லாமல் வாகனங்கள் செல்ல முடிகிறது.
ஒரு வினாடி கூட தாமதம் இல்லாமல் வாகனங்கள் செல்ல இத்திட்டம் வழி வகுத்துள்ளது. பாஸ்ட் டிராக் கணக்கில் ஒருவேளை பணம் இல்லை என்றாலும் கூட வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை. 72 மணி நேரத்திற்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்து பணத்தை செலுத்த வேண்டும்.
இது பற்றிய தகவல் எஸ்.எம்.எஸ். வழியாக சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு உடனே தெரிவிக்கப்படும். அவர் அலட்சியமாக இருந்தாலோ அல்லது கட்டணம் கட்டக்கூடாது என்று முறைகேடு செய்ய நினைத்தாலோ அது நடக்காது.
3 நாளைக்குள் பாஸ்ட் டிராக் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்திற்கு 100 ரூபாய் சுங்க கட்டணத்திற்கு அபராதத்துடன் 200 ரூபாய் பெறப்படும்.
வாகன உரிமையாளர் சுங்க கட்டணம் செலுத்தாமல் தொடர்ந்து இருந்து வந்தால் அவரது கணக்கில் அடுக்கடுக்காக அபராதம் விதிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். அந்த வாகனம் புதுப்பித்தல் மற்றும் தரச் சான்று பெறுதல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சுங்க கட்டணம் மற்றும் மொத்த அபராத தொகையும் அவரது கணக்கில் இருந்து பெறப்படும். அதன்பிறகே அந்த வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த புதிய நடைமுறையால் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். இலவசமாக யாரும் செல்ல முடியாது. சுங்கச்சாவடியில் காத்து நிற்காமல் செல்லலாம். மத்திய அரசு அறிவித்துள்ள முக்கிய பிரமுகர்கள் தவிர வேறு யாரும் சென்றாலும் கட்டணம் வசூலிக்கப்படும். இலவசம் என்ற பெயரில் யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றார்.