கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
இன்று அதன் விலை மேலும் அதிகரித்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.
வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120வரையிலும், பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.100க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் கத்தரிக்காய், பீட்ரூட், பாகற்காய், பீர்க்காங்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10முதல் ரூ.20வரை அதிகரித்து உள்ளது.
காய்கறி மொத்த வியாபாரி ஒருவர் கூறும் போது, “கோயம்பேடு சந்தைக்கு இன்று 550லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு சில பகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்தது போனதால் காய்கறி விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது” என்றார்.
தக்காளி-ரூ.8முதல் ரூ.18வரை, நாசிக் வெங்காயம்-ரூ.24 முதல் ரூ.30 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50முதல் ரூ.70 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.50, வெண்டைக்காய்-ரூ.30, பீட்ரூட் - ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.30, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ் -ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.35, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி-ரூ.90முதல் ரூ.150வரை.