தமிழக செய்திகள்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

இதனால் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.40 ஆக அதிகரித்து உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 600 லாரிகளில் குவிந்து வரும் காய்கறி தற்போது 450 லாரிகளாக குறைந்து போனது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் வரத்து குறைந்துள்ளதால் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு:-

தக்காளி-ரூ.30- ரூ.40வரை, நாசிக் வெங்காயம்-ரூ.18 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50 வரை, உருளைக்கிழங்கு-ரூ.20 வரை,

உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, பீன்ஸ்- ரூ90வரை, ஊட்டி கேரட் -ரூ.40, பீட்ரூட்-ரூ.30, வெண்டைக்காய்-ரூ.50, அவரைக்காய்-ரூ.50, முருங்கைக்காய்-ரூ.40, நைஸ் கொத்தவரங்காய் -ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40, பாகற்காய்-ரூ.60, முட்டை கோஸ்- ரூ.20, மாங்காய்-ரூ.15, எலுமிச்சை பழம்-ரூ.180 வரை, இஞ்சி-ரூ.60, பச்சை மிளகாய்-ரூ.35.