சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது.
மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ80-க்கும், பாகற்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.80-க்கும், பாகற்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தேவை அதிகரித்து வரத்து குறைந்து உள்ளதால் எலுமிச்சை பழம் விலையும் உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் அதிகரித்தது. ஒரு கிலோ ரூ.180-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.230-வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 550 லாரிகளில் காய்கறிகள் குவிந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 450 லாரிகளில் மட்டுமே காய்கறி விற்பனைக்கு வருவதால் தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோடை வெயிலின் தாக்கத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதன் காரணமாகவே காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விவரம் கிலோவில் வருமாறு:-
தக்காளி-ரூ.16 முதல்-ரூ.24வரை
வெங்காயம்-ரூ.16 வரை,
சின்ன வெங்காயம்-ரூ50 வரை,
உருளைக்கிழங்கு-ரூ.15,
கத்தரிக்காய்-ரூ.25,
வெண்டைக்காய்-ரூ.35,
அவரைக்காய்-ரூ.50
முருங்கைக்காய்-ரூ.30 முதல்-ரூ.40 வரை,
பீன்ஸ்-ரூ.80,
ஊட்டி கேரட்-ரூ.30,
பீட்ரூட்-ரூ.30,
கோவக்காய்ரூ.20,
கொத்தவரங்காய்-ரூ.20,
பன்னீர் பாகற்காய்-ரூ.60,
புடலங்காய்-ரூ.35,
பீர்க்கங்காய்-ரூ.40,
வெள்ளரிக்காய்-ரூ.30,
மாங்காய்-ரூ.20,
இஞ்சி-ரூ.55,
பச்சை மிளகாய்-ரூ.20.