தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வேதாந்தாவின் 'கிரீன் காப்பர்' திட்டத்தை மாநில அரசு நிராகரிக்க வலியுறுத்தி மதிமுக தலைவர் வைகோ தமிழக முதலமைச்சர் விஜய்-யை சந்தித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ:-
மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட போது, அல்போன்சா மாமரங்களை வளர்க்கின்ற விவசாயிகள், இது விஷக்காற்றை பரப்பும் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு முதலமைச்சராக இருந்த சரத்பவார் மறுநாளே உரிமையை ரத்து செய்தார்.
அதை தொடர்ந்து அதன் உரிமையாளரான அனில் அகர்வால் கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் முயன்று அவர்கள் அதை அனுமதிக்காததால், தமிழ்நாட்டிற்கு வந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அதன்பின்னர் ஒருவார காலத்திற்குள் லைசன்ஸ் வாங்கி, ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நிறுவினார்.
அது தொடங்கப்பட்ட நாள் முதல் நாங்கள் விவசாய அமைப்போடு இணைந்து எண்ணற்ற போராட்டங்களை நடத்தினோம். பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, ஸ்டெர்லைட் தரப்பில் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார்.
அந்த வழக்கில் நான் ஏழு மணி நேரம் வரை எனது வாதத்தை எடுத்து வைத்தேன். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற தீர்ப்பு கிடைத்தது. உடனே அதன் உரிமையாளர் அனில் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து மீண்டும் ஆலையை இயங்க தொடங்கினார்.
பின்னர் மேலும் வழக்குகளை தொடுத்து அந்த வழக்குக்ளில் 33 வாயுதாக்களில் நான் கலந்துகொண்டேன். நீதிமன்றத்தின் மூலம் ஆலை மூடப்போவதாக புலனாய்வு அமைப்பு மூலம் அறிந்த ஜெயலலிதா, அப்போதைக்கு ஆலையை மூடுவதாக அறிவித்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றம் ஆலையை மூடவில்லை, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்துமாறு அறிவுறுத்தியது. நீதியரசர் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவை பெற்று அந்த மண்டலத்தை காப்பாற்றி கொடுத்தோம்.
இன்றைக்கு பல நாடுகளில் வேதாந்தா குழுமம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தாமிரம் கிடைக்கவில்லை, அது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 399 ஏக்கர் சிப்காட் விலத்தை வேதாந்தா குழுமம் 99 வருடங்களுக்கு லீசுக்கு வாங்கிவிட்டது.
இப்போது அனில் அகர்வால் எப்படியாவது இந்த ஸ்டெர்லைட்டை வேறு ஒரு வடிவத்தில் கிரீன் காப்பர் என்ற பெயரில், மீண்டும் கொண்டு வந்து நிறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
நமது முதலமைச்சரை ஒருவேளை சந்திப்பதற்கு முயற்சி செய்யலாம். இந்த அரசிடம் அனுமதி வாங்குவதற்கு முயற்சிக்கலாம். அதற்கு இடம் கொடுக்க கூடாது.
அது புற்று நோய்களையும் சர்வ நோய்களையும் ஏற்படுத்தி, அடியோடு 40 கி.மீ சுற்றளவிற்கு விவசாய நிலத்தை பாழ்ப்படுத்துகிறது. இந்த காப்பர் ஸ்மெல்டர் வேறு வடிவத்தில் தாமிர தொழிற்சாலை என்ற பெயரிலே அங்கு வருவதற்கு அனுமதிக்க கூடாது.
இந்த தவெக அரசிடம் அனுமதி கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி விரிவான ஒரு மெமரேண்டம்(கோரிக்கை மனுவை) ஆங்கிலம் மற்றும் தமிழில், முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் தந்து இந்த பின்னணியை சொல்லி இருக்கிறேன்.
இவ்வாறு மதிமுக தலைவர் வைகோ கூறினார்.