தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலத் தொடக்கம்!

மாநாட்டுத் திடல் முழுமையாக நிரம்பி வழிவதோடு, வாகனப் போக்குவரத்தும் அப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறைப்படி தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால், உளுந்தூர்பேட்டை பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநாட்டுத் திடல் முழுமையாக நிரம்பி வழிவதோடு, வாகனப் போக்குவரத்தும் அப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் பங்கேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். எழுச்சிப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழக அரசியல் சூழல், தமிழ் தேசிய உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்பு

மாநாட்டின் முத்தாய்ப்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரணித் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றவுள்ளார். வரவிருக்கும் தேர்தல் அரசியல், தமிழ் தேசியத்தின் தேவை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக அவர் பேசவிருக்கும் கருத்தாழமிக்க உரையை கேட்க மாநாட்டுத் திடலில் கூடியுள்ள மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு, மாநாடு அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.