தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாட்டின் பண்பாடு, இலக்கிய மரபுகள் மற்றும் அரசியல் அசைவுகளை கற்றுக்கொண்டு நேர்மையான நிர்வாகத்தை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும், ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின்
முழுநேர ஆளுநராக
நியமிக்கப்பட்டிருக்கும்
மேதகு ராஜேந்திர விஸ்வநாத்
ஆர்லேகர் அவர்களுக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அரசியல் ஆட்சி என்ற
இரண்டு நிலைகளிலும்
அனுபவம் பெற்ற
ஆற்றலாளர் நீங்கள்
தமிழ்நாட்டின்
வாழ்வியல் விழுமியங்கள்;
பண்பாட்டுச் செழுமங்கள்;
இலக்கிய மரபுகள்;
அரசியல் அசைவுகள்
அனைத்தையும்
முற்றும் கற்றுக்கொண்டு
நேர்மையான நிர்வாகம்
வழங்க விழைகிறோம்;
வழங்குவீர்கள் என்றும்
நம்புகிறோம்
ஞானபீட விருதுக்கு
வாழ்த்துச் சொன்ன
தங்கள் பண்பாடு
இன்னும் என் நெஞ்சில்
ஈரமாக இருக்கிறது
மீண்டும்
ஆயிரம் வாழ்த்துக்கள்
ஆளுநர் அவர்களே! என்று கூறியுள்ளார்.