வைகோ 
தமிழக செய்திகள்

என்னை ‘அரசியல் வடிவேலு’ என விமர்சிப்பதால் மகிழ்ச்சியே- வைகோ

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, மண்டபத்திற்கு அருகில் குறிப்பிட்ட ஓர் இடத்தில்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

வைகோ, தன்னை அரசியல் வடிவேலு என விமர்சிப்பதை வரவேற்றார். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் மறைமுக ஆதரவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பு தமிழகத்திற்கு எதிரானது எனவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

கோவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடிவேலு என்றதில் மகிழ்ச்சி

வி.எஸ்.பாபு இறுதிச்சடங்கின்போது யாரையும் நான் திட்டவில்லை. என்னை நெருங்கி வந்து யாரோ பின்னால் கையை பிடித்து இழுத்தபோது வேலையை பாருங்கள் என்றேன். அவமானப்படுத்தப்பட்டதால் தான் தி.மு.க.வில் இருந்து வெளியேறினேன். என்னை அரசியல் வடிவேலு என விமர்சிக்கின்றனர். வடிவேலுவுடன் ஒப்பிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. வடிவேலு இல்லையென்றால் படங்கள் ஓடியிருக்காது. மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையற்றது.

வேதனை

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, மண்டபத்திற்கு அருகில் குறிப்பிட்ட ஓர் இடத்தில்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தூணின் உச்சியில் ஒருபோதும் தீபம் ஏற்றப்பட்டதில்லை. ஆனால், நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு அந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் பல ஆண்டுகளாக ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடும். நீதிபதிகள் குறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்க நான் விரும்பவில்லை.

கண்டிப்பு

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு கூடுதலாக 11 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக தீர்மானித்துள்ளது. மேலும், கீழ்ப்பாசன மாநிலமான தமிழகத்திற்கு செல்லும் நீரின் ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் மேல்பாசன மாநிலம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவளிக்கிறது என்றால், தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடி தலைமையிலான மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய அரசு நேரடியாக அனுமதி வழங்காமல் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமாக அணை கட்டும் பணிகளை தொடர கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி காட்டும் உத்தியை கடைப்பிடிப்பதாக தெரிகிறது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவளித்தால், தமிழகம் போராட்டத்தில் இறங்கும். எனவே தான், மறைமுகமாக கர்நாடகாவை திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்கிறது.

போராட்டம்

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி அழிந்துபோகும் என்று மக்களை எச்சரித்தேன். தமிழகத்திற்கு இன்று இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இதுதான். எனவே, வருகிற 28-ந்தேதி தஞ்சாவூரில் மிகப்பெரிய கண்டன போராட்டத்தை நடத்தவுள்ளோம். விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்னுடன் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்திற்கு தேவையான மிகவும் நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்தி வருகிறார். இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகள் அனைத்தும் ஊழல் நிறைந்தவை, அந்த வகையான ஊழல் இங்கு இல்லை. எதிர்க்கட்சியினர் தங்களின் தீர்மானிக்கும் திறனையே இழந்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT