தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - வைகோ

நாங்கள் இந்த அரசுக்கு ஏற்கனவே வரவேற்பு தெரிவித்து இருக்கிறோம்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர்

வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கொடுத்த காலக்கெடுவுக்குள் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதைப்போன்று நாங்களும் 6 மாதங்கள் அமைதியும், பொறுமையும் கடைபிடிப்போம். அதே நேரத்தில், இந்த அரசின் நல்லத் திட்டங்களை வரவேற்போம்.

விஜய், குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது எனது கருத்து. அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது அவரது கருத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் ஆக்குவதற்கு நடைபெற்ற முயற்சிகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் சட்டசபைக்கு செல்லவில்லை. அவர்கள் சட்டசபைக்கு சென்றிருந்தால் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் இந்த அரசுக்கு ஏற்கனவே வரவேற்பு தெரிவித்து இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில்தான் ம.தி.மு.க. தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.