தமிழக செய்திகள்

வைகாசி பவுர்ணமி - திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

கிரிவலம்

இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 12.50 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலை நகரம், மாட வீதிகள் மற்றும் கிரிவலப்பாதை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.41 மணி அளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் இன்று அதிகாலை வரையில் தொடர்ந்து விடியவிடிய கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.

4 மணி நேரம்

பவுர்ணமி மதியத்தில் தொடங்கியதால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர். கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் பரணிதரன் மோர், குடிநீர் பாட்டில், பிஸ்கட், வாழைப்பழம் போன்றவற்றை வழங்கினார்.

இந்த நிலையில் தரிசனம் முடித்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பக்தர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதி காணப்பட்டனர். அப்போது பஸ் மற்றும் ரெயிலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து ஏறியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT