தமிழக செய்திகள்

வைகை அணை பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியது- ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வைகை அணைக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு வைகை ஆறு, முக்கிய நீர்வரத்து பகுதியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பருவமழை குறைந்ததாலும் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் 30-ந்தேதி அணையின் நீர் இருப்பு 319 மி.கன அடியாக குறைந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக உள்ளது. நீர்வரத்து முற்றிலும் நின்று விட்ட நிலையில் மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணையில் நீர்மட்டம் குறையும் போது மீன் பிடிக்க அனுமதி அளிப்பது கிடையாது. ஆனால் தற்போது தொடர்ந்து அணைப்பகுதியில் மீன் பிடித்து வருவதால் தண்ணீரின் தன்மை மாறி பச்சை நிறமாக காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் சகதியாக உள்ளதால் இவ்வாறு உள்ள தண்ணீர் குடிநீருக்கு திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 40 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளதால் அடுத்து வரும் நாட்களுக்கு மதுரை, தேனி மாவட்ட மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் உள்ளதால் இது குறித்து 2 மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வைகை அணைக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வருவதில்லை. மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு சென்றது போக மற்ற தண்ணீர் முழுவதும் வைகை அணையை வந்தடைய வேண்டும். ஆனால் வழி நெடுகிலும் மோட்டார் வைத்து தண்ணீர் திருடப்படுவதால் வைகை அணைக்கு தண்ணீர் வருவதில்லை. இது குறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் வைகை அணையில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை தண்ணீர் வரும் பாதையை ஆய்வு ெசய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாளை அல்லது நாளை மறு நாள் வருவாய்த்துறை, காவல் துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து சற்று உயர்ந்து 244 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1102 மி.கன அடியாக உள்ளது. முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஜூன் மாதத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 2ம் போக சாகுபடி முடிந்தபிறகு 100 கன அடி மட்டும் திறக்கப்பட்டு வந்தால் தற்போது அணையின் நீர்மட்டம் ஓரளவு திருப்தி கரமாக இருந்திருக்கும். முறையற்ற முறையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் சந்தேகமடைந்துள்ளனர்.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ளதே காரணம் என கூறப்படும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. பெரியகுளத்தில் 27, மஞ்சளாறு பகுதியில் 14, பெரியாறு அணை 2.4 என ஒரே நாளில் 45 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.