தமிழக செய்திகள்

வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல்- முருக பக்தர்கள் 2 பேர் பலி

விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள நாகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 50). முருக பக்தரான இவர் மற்றும் இவரது நண்பர்களான சண்முகம் (45), யுவராஜ் (50), சரவணன் (42), தேவராஜ் (47) ஆகிய 5 பேர் ஒரு காரில் நேற்று காலை திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர்.

லாரி மீது மோதல்

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்த அவர்கள் நேற்று இரவு மீண்டும் நாமக்கல்லுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் இவர்கள் வந்த கார், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

படுகாயம்

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி முகம் சிதைந்த நிலையில் சண்முகம் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காருக்குள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் காருக்குள் சிக்கியிருந்த யுவராஜ், சரவணன், தேவராஜ் ஆகிய மூவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் வழக்கு பதிவு

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து நடந்த நகரி கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுவதாகவும், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஆலைகள் இந்த பகுதியில் உள்ள நிலையில் சாலையில் ஓரங்களில் கனரக வாகனங்களை நிறுத்தி செல்வதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படுவது தொடருகிறது. இரவு நேரங்களில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT