தமிழக செய்திகள்

வடநெம்மேலி பாம்பு பண்ணை மூடல்: விஷம் எடுப்பதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பாம்புகளின் இனப்பெருக்கம் மற்றும் கோடை வெயிலின் வெப்பம் காரணமாக, மே மாதம் முதல் செப்டம்பர் வரை 5 மாதங்களுக்கு பாம்புகள் பிடிக்க அரசு தடைவிதித்து உள்ளது.

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறை சார்பில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு காடுகளில் இருந்து இருளர்களால் பிடித்து வரப்படும் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன், நல்லபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதில் இருந்து விஷம் எடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விஷம் எடுப்பதை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.30-ம், சிறியவர்களுக்கு ரூ.18-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் பாம்பு பிடிக்க அரசு சார்பில் வழங்கப்பட்ட உரிமம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பாம்புகளின் இனப்பெருக்கம் மற்றும் கோடை வெயிலின் வெப்பம் காரணமாக, மே மாதம் முதல் செப்டம்பர் வரை 5 மாதங்களுக்கு பாம்புகள் பிடிக்க அரசு தடைவிதித்து உள்ளது.

மேலும் பாம்பு பண்ணையும் மூடப்பட்டது. இந்த பாம்பு பிடி தடை காலத்தில் சங்க உறுப்பினர்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என இருளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நெம்மேலி பாம்பு பண்ணை மூடியதால் விஷம் எடுப்பதை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருகில் இருக்கும் முதலை பண்ணையில் கூண்டில் வைத்திருக்கும் அணகோன்டா, மலைப்பாம்பு, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட ஒருசில பாம்புகளை காட்சி பொருளாக மட்டுமே பார்த்து வருகின்றனர்.