காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.
இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.
வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.