தமிழக செய்திகள்

வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்

அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோளாறு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளில் யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (சைட்ஸ் 2.01) நடைமுறைப்படுத்தியது. இந்த தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்தாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிக்கல், வருங்கால் வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது. கோரிக்கைகளை பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.

குற்றச்சாட்டு

வழக்கமாக விண்ணப்பித்த 3 நாட்களில் (குறைந்தபட்சம்) சந்தாதாரர்களுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இது அவர்களுடைய அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவிக்கரமாக இருந்தது. ஆனால் சமீப நாட்களில் விண்ணப்பித்து 1% மாதம் ஆகியும் சந்தாதாரர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யும் பணியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

நோக்கம்

வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை, வங்கி கணக்குகளுடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.