சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், திருமுல்லைவாசல், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போதிய மின்சாரம் கிடைக்காததால் விவசாயி பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவி ந்தராஜர் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்று மாலை 5 மணி அளவில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 8.30 மணி வரை மின்சாரம் வரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரத் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கையில் இருந்த தீப்பந்தங்களை தெருவில் உள்ள மின் கம்பத்தில் கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், சீர்காழி கோவிந்தராஜன் நகரில் கடந்த சில வாரங்களாக தினமும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். குடியிருப்பு அருகில் சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கு இருப்பதால் பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இதனால் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இருந்து வருகிறோம். எனவே மின்சார துறையினர் கோவிந்தராஜ் நகர் பகுதிக்கு முழுமையான மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர்.
பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.