தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு

சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

சுங்கச்சாவடி

அந்த வகையில் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று காலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.5-ல் இருந்து ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

செங்குறிச்சி சுங்கச்சாவடி

செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தற்போது பலமுறை பயணிக்கும் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதே கட்டணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

லாரி, பஸ்

இதேபோன்று ஒருமுறை பயணிக்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பஸ்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 15 ரூபாய் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.

சுங்க கட்டணம்

தற்போது லாரிக்கு ரூ.380 சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.20 வரை உயர்த்தப்பட்டு ரூ.400 ஆக வசூலிக்கப்பட உள்ளது. பஸ்சுக்கு ரூ.240 வசூலிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.250 ஆக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1-ந் தேதி முதல் உயர்வு

இதேபோன்று செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக வரும் மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இந்த புதிய கட்டண உயர்வு முறையானது செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT