தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. திமுக தேர்தல் அறிக்கை நாளை மாலை வெளியாகிறது.
எதிர்வரும் தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார். அதே சமயம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்குகிறார். அண்மையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் தனது ஆஸ்தான தொகுதியான போடியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்கள்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்த கழகு பொதுச்செயலாளருக்கு நன்றி.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மக்கள் மீண்டும் என ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
திமுகவில் இந்த முறை தியவர்கள் நிறைய பேர் தேர்தலில் போட்டியிட தலைவர் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காகவே அதிகமானருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கடந்த தேர்தலின்போதே நீட் தேர்வை ஒழிப்பதாக கூறியும் இன்னும் ஒழித்தபாடில்லை என நிருபர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த உதயநிதி, " 2024 மக்களவை தேர்தலின்போதும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ராகுல் காந்தி இங்கு வந்து வாக்களித்து சென்றார்.
தமிழக அரசு சார்பில் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.
இப்போதும் சொல்கிறோம். பாஜக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்தியில் பாஜகவை அப்புறப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டில் மீண்டும் சுயமரியாதை இயக்கம் ஆட்சி அமையும்போது நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.