தமிழக செய்திகள்

சோபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை - உதயநிதி

அடுத்த கட்சி ஆட்களையும், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்ச்சியாக இந்த அரசு கொள்முதல் செய்து கொண்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேரனும், கலாநிதி வீராசாமியின் மகனுமான வி.கே.சித்தார்த்- ஆஷ்ரயா காயத்ரி திருமணம் இன்று வானகரத்தில் நடந்தது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மணவிழாவுக்கு தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சோபா மாடல் ஆட்சி வந்ததற்கு பிறகு எம்.எல்.எ.க்கள் பலர் ராஜினாமா செய்கிறார்கள். இந்த அரசு எதை கொள்முதல் செய்கிறதோ? இல்லையோ? அடுத்த கட்சி ஆட்களையும், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்ச்சியாக இந்த அரசு கொள்முதல் செய்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்டவர்கள் மத்தியில் இன்றைக்கு ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே லட்சியம் என்று ஆற்காட்டார் இன்றைக்கும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

கொண்ட கொள்கையில் தடம் மாறாத, தடம் மாறாமல் பயணித்து கொண்டிருக்கிற ஆற்காட்டார் ஒரு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் திராவிட மாடல் அமைந்தபோது நமக்கு வாக்களிக்காத மக்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு வாக்களிக்காமல் தவறி விட்டோமோ? என்று அந்த எண்ணத்தோடு இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இந்த சோபா மாடல் அரசு அமைந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சிக்கு நாம் ஓட்டு போட்டு விட்டோமே என்று மக்கள் வருத்தப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நம்முடைய கழக ஆட்சி நிச்சயம் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.