தமிழக செய்திகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக இணைய தளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டமாக நடத்தப்படும். சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.

2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும், அதற்கு முன்னதாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது.

சுயவிவரக் கணக்கெடுப்பு

இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்பு தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும்.

இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரின் விவரங்களை இணைய தளத்தில் பதிவுசெய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மக்கள் பங்கேற்க அழைப்பு

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.