தண்ணீர் திறப்பில் திட்டமிடல் இல்லாமல் செயல்பட்ட த.வெ.க. அரசு, குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளை பாதித்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து, உணவு உற்பத்தி குறைவுக்கு காரணமாகி, விலைவாசி உயர்வை ஏற்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற கால கட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், ரீல்ஸ் வெறி கொண்டு அவசரகதியில் முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலை வாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தையும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சனை குறித்து உடனே ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியா ளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.