திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட்டவர் நமது முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய், ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஒரு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனை வைத்துக்கொண்டு 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார். மோடியின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறி உள்ளார். இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். அதற்கான ஆதரவு தர வேண்டும். செய்வீங்களா நீங்கள் செய்வீங்களா...
உங்களிடம் அன்போடு, பாசத்தோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக கேட்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.