சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி பகுதி 116-வது வட்டத்தில் தெருத் தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் சென்ற உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். கட்சி நிர்வாகிகள் புடைசூழ வீடு வீடாக சென்று உதயநிதி ஸ்டாலின் ஆதரவு கேட்டார்.
உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பொதுமக்கள் உங்களுக்குதான் எங்கள் ஓட்டு என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
உதயநிதி ஸ்டாலின் ஓட்டு கேட்டு வருவதை அறிந்த மக்கள் வீட்டு வாசலில் நின்று அவரை பார்த்து கையசைத்தனர். மாடிகளில் வசிக்கும் மக்களும் வெளியே வந்து பார்த்தனர். சில வீடுகளில் அவருக்கு ஆரத்தி எடுத்தும், ரோஜாப் பூ தூவியும் வரவேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் சின்ன குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சினார்.
மாட்டாங்குப்பம் துவங்கி வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோவில் பகுதியில் 1 முதல் 6 தொகுதிகள் வரை நடந்து சென்று வீடு வீடாக வாக்கு கேட்டார்.
அதன் பிறகு பழனி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள 6 தெருக்களுக்கு நடந்து சென்று வீடு வீடாக வாக்கு கேட்டார். அங்குள்ள பழைய கட்டை தொட்டி தெரு, புதிய கட்டை தொட்டி தெரு, சுங்குவார் தெரு ஆகிய பகுதிகளுக்கும் சென்று வாக்கு கேட்டார்.
அவருடன் தயாநிதி மாறன் எம்.பி., அண்ணா நகர் வேட்பாளரான மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள் உடன் சென்றனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு காணப்பட்டது. வாக்கு சேகரிப்பின்போது, ஒரு மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஆட்டோகிராப் வழங்கினார்.