தமிழக செய்திகள்

செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!

நடிகை ஒருவர் குறித்து தவறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், விசாரணைக்காக செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவரை தவறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தவெகவினர் அளித்தப் புகாரின்பேரில், தஞ்சை காவல்துறையினரால் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு போலீசார் திடீரென வாகனத்தைத் திருப்பி திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்தில்தான் இறங்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.

விசாரணைக்காக காவல் வாகனத்தில் இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார். விசாரணை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.