தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (வயது 16). அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் மனோஜ்(16). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் தங்களது நண்பர்களான 5 சிறுவர்களுடன் சேர்ந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைபர் படகில் கடலை சுற்றி வர திட்டமிட்டு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென படகு பழுதான நிலையில் படகில் இருந்த சிறுவர்கள் ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கடலில் நீந்தி கரைக்கு சென்று விடலாம் என நினைத்து கடலில் குதித்து நீந்த தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் படகில் இருந்த மற்றொரு சிறுவர் இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து சென்று படகில் இருந்த 3 பேரையும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 சிறுவர்கள் என 5 பேரை மீட்டார்.
தொடர்ந்து கடலில் குதித்து நீந்தி சென்று காணாமல் போன ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரை தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரவு நேரம் என்பதால் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அனைவரும் கரை திரும்பினர்.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தருவைகுளம் மீனவர்கள் பல்வேறு படங்களுடன் சென்று கடலில் தேடியபோது ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரின் உடல்கள் கடலில் மிதப்பதை கண்டனர். பின்னர் மீனவர்கள் அவர்களது உடல்களை மீட்டு தருவைகுளம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது கிராமமே சோகத்தில் மூழ்கிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.