உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல் குவாரிகளுக்குச் சென்று வரும் கனரக லாரிகளும் இந்தப் பாலத்தின் வழியாக அதிக அளவில் செல்கின்றன.
காஞ்சீபுரம் நகரம் கோவில் நகரமாகவும், பட்டுச் சேலைக்கு புகழ் பெற்றதாகவும் விளங்குகிறது. இதனால் காஞ்சீபுரத்திற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக மாநகரின் முக்கிய சாலைகளில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது பாலாறு மேம்பாலப் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து காஞ்சீபுரம் வழியாக சென்னை நோக்கிச் செல்லும் பஸ்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன.
இதேபோல், காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் அதிகரித்து வருவதால், பாலாறு மேம்பாலத்தைக் கடந்து செல்வதில் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதல் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது கூடுதல் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் குவிவதால் பாலாற்று மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று இரவு ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் பாலாற்று பாலத்தில் அணி வகுத்து வந்தன. மழையும் பெய்து கொண்டு இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்தனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, வெம்பாக்கம், திருவண்ணாமலை, ஆரப்பாக்கம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல் குவாரிகளுக்குச் சென்று வரும் கனரக லாரிகளும் இந்தப் பாலத்தின் வழியாக அதிக அளவில் செல்கின்றன. இதனால் பாலத்தின் மீது கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே பாலத்தின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியைக் கடக்கும் போது வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது.
பாலத்தின் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.