தமிழக செய்திகள்

120 பலத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தவெகவிற்கு ஆதரவை உறுதிப்படுத்தியது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை.

போதிய பெரும்பான்மை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும்வரை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவைக் கோரியது தவெக. காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. காங்கிரஸ் இணைந்ததும் தவெக எண்ணிக்கை 113 ஆக உயர, ஆட்சியமைக்க இன்னும் 6 தொகுதிகள் தேவைப்பட்டது.

தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை தவெகவிற்கு வழங்கியுள்ளன.

இந்நிலையில், இன்று மாலை விசிக கட்சியும் தவெகவிற்கு தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இதன்மூலம் தவெகவின் கூட்டணி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கடிதங்களுடன் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

SCROLL FOR NEXT