தமிழக செய்திகள்

திருச்சி அருகே த.வெ.க. அலுவலகம் தீ வைத்து எரிப்பு- பிளக்ஸ் பேனர்களை கிழித்து சூறையாடிய மர்ம நபர்கள்

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குளித்தலை:

பெட்டவாய்த்தலை அருகே திருச்சி-கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காமநாயக்கன்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட விவசாய அணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, இங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை வேயப்பட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் தினமும் ஒன்று கூடி, இங்கிருந்து பிரசாரத்திற்கு செல்வது, கூட்டம் நடத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு த.வெ.க.வின் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை கத்தியால் கிழித்தும், அலுவலகத்தில் 20-க்கு 20 அடி பரப்பளவு கொண்ட கீற்று கொட்டகைக்கு தீ வைத்து எரித்துள்ளனர். கும்பலாக வந்து இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த இடம் முழுவதும் எரிந்து நாசமானது.

இதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் அந்த பகுதியில் திரளான த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

த.வெ.க. அலுவலகத்திற்கு தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள் குறித்து திருச்சி மாநகர மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரசிவா, பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தியும், கத்தியால் கிழித்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை அருகில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தை மர்மநபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.