தமிழக செய்திகள்

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவு: த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

வி.எஸ்.பாபு சுமார் 72 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொளத்தூர் எம்.எல்.ஏ. விஎஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து மற்றும் த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான வி.எஸ்.பாபு சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 9 அன்று அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 72 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று பிற்பகல் 2:24 மணியளவில் காலமானார்.

இந்நிலையில், கொளத்தூர் எம்.எல்.ஏ. விஎஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து மற்றும் த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக த.வெ.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

நிகழ்ச்சிகள் ரத்து

இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT