தமிழக செய்திகள்

விஜய் ஆட்சியை த.வெ.க. எம்.எல்.ஏ.க்களே கவிழ்த்து விடுவார்கள்- தினகரன்

தமிழக அரசியலில் 67, 77-ம் ஆண்டுகளில் நடந்து போல் தற்போது ஆட்சி நடப்பதாக விஜய் கூறுகிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்திற்கு ஆட்படுத்தி 6 எம்.எல்.ஏ.க்களை பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தாராபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-.

விஜய் தலைமையிலான அரசு 107 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துக் கொண்டு பலரின் ஆதரவை பெற்று ஆட்சியை நடத்தி கொண்டுள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்திற்கு ஆட்படுத்தி 6 எம்.எல்.ஏ.க்களை பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

ஏற்க மாட்டார்கள்

அ.தி.மு.க.வை உடைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது விஜய் அரசு. திரும்ப வந்த எம்.எல்.ஏ.க்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் அண்ணன் இ.பி.எஸ். ஆனால் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையுடன் வலம் வருகிறார். இந்த இடைத்தேர்தலுக்கு விஜய்தான் காரணம். மதுராந்தகத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் தெரு, தெருவாக சுற்றுகிறார். தெரு, தெருவாக சுற்றினாலும் கொத்து புரோட்டா போட்டாலும் மக்கள் விஜய்யை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

விஜய்

விஜய் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ, நிஜத்தில் வில்லன். த.வெ.க கூட்டணியில் உள்ள வைகோவும், திருமாவளவனும் அக்கூட்டணியில் மரியாதையில்லாமல் நெளிந்து கொண்டே சகித்து கொண்டு உள்ளனர். இருவரும் எத்தகைய அரசியல் சாணக்கியர்கள். தமிழக அரசியலில் 67, 77-ம் ஆண்டுகளில் நடந்து போல் தற்போது ஆட்சி நடப்பதாக விஜய் கூறுகிறார். அந்த ஆண்டுகளில் மொழிபோருக்கு கிடைத்த ஆதரவே ஆட்சி மாற்றம். ஆனால் தாய்மொழி மீது பற்றற்றவர்கள் தமிழ் மொழியை சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் தற்போது ஆட்சி நடத்துகிறார்கள்.

தவெக

சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்றவர்கள் தான் தற்போது த.வெ.க.வில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். த.வெ.க.எம்.எல்.ஏ.க்களால் விஜய் ஆட்சி கவிழும். இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார்.

பேட்டியின்போது கோவை மண்டல செயலாளர் சண்முகவேல், அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல்சீனிவாசன், தம்பித்துரை எம்.பி, முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT