கருப்பையா எம்.எல்.ஏ.
தமிழக செய்திகள்

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு: தான் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கம்

இளைஞர் சமூதாயத்தை ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் சொன்னேன்.

சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா நேற்று சட்டசபையில் பேசும்போது, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருப்பையா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அவர்கள் தவறான வழிக்கு போகக் கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு பில்டிங்கிற்குள் அடைக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மிக்கது. வரலாறு மிக்கது. தொன்மை வாய்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நம்முடைய சமூகம் கொண்டு வந்தது என்பது தெரியும்.

ஜல்லிக்கட்டு மறையாமல், மங்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நானும் ஒருவன். 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடைபட்டது. நான் சட்டமன்ற உறுப்பினரான பின், அம்மாவிடம் கடிதம் கொடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி 84 நிபந்தனைகளுடன் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்தான். அப்போது இருந்து மாவட்ட ஆட்சியர் உதவி புரிந்தார்.

இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்தனும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் சொன்னனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது.

84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்

நான் சொன்னது அம்மா அரசு நடக்கும்போது. 4 வருடம் தடைபட்டிருக்கும்போது 84 நிபந்தனைகளுடன் நடத்தியது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான்தான். தடை போடுவதற்கு என்ன இருக்கு? தடையே கிடையாது. ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இளைஞர்கள் அவர்களுடைய வீரத்தை சந்தோசமான பறைசாற்றுவார்கள். சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நான் எம்.எல்.ஏ.-வாக இருந்தபோது சர்க்கரை ஆலை நன்றாக செயல்பட்டது. அங்கு (ஜல்லிக்கட்டு அரங்கம்) செலவழிக்கப்பட்ட பணம் சர்க்கரை ஆலைக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், 5 மாவட்ட விவசாயிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், மில் நன்றாக ஓடியிருக்கும். அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

கலைஞர் நூற்றாண்டு விழா என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை செய்தது. அது மேச்சல் தரிசு நிலம். இந்த பகுதியில் எந்தவொரு கல்லூரியும் கிடையாது. 90 ஏக்கர் நிலத்தில் கால்நடை பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நான். அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலும் அளிக்கப்பட்டது.

அந்த மேச்சல் நிலத்தை சுற்றுலாத் துறைக்கு கொடுத்து, சுற்றுலாத்துறைக்கு நிலம் இல்லாமல் உள்ளது. சுற்றுலாத்துறை வேறொரு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும்

இளைஞர்களை ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது. இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும். ஒரு மாடு வந்தது என்றால் திமிலை இழுத்து பிடிக்க வேண்டும். ஸ்பெயின் போன்ற ஐரோப்பா நாடுகள் மாதிரி ஒரு கட்டடத்திற்குள் விட்டு அதை ஒருவர் பிடிக்கிற மாதிரி ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. இது நம்முடைய பாரம்பரியம். கலாசாரம். நம் முன்னோர்கள் வளர்த்து வைத்துள்ள பாரம்பரியம், பண்பாடு, தமிழர்களின் உணர்வு. அதை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

தவெக-வின் தலைவர் இளைஞர்களை நம்பி இருக்கிறார். அவர்களை கொச்சை படுத்துவோமா?. அவர்களை சுதந்திரமாக விடுங்கள் என்று சொல்கிறோம்.

இவ்வாறு சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்துள்ளார்.