தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபு காலமானார்!

அவரது உடல்நலம் குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடக்கோரி மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு காலமானார்.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிப் பெற்றவர் வி.எஸ்.பாபு.

இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நலன் தேறி வருவதாகவும், செப்.22 வரை வந்த மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை.

அதேவேளையில், பாபு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சர் அருண்ராஜ் இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இவரது உடல்நலம் குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மதியம் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனை அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னதாக மருத்துவமனைக்கு விரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த வி.எஸ்.பாபு கிட்டத்தட்ட 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

SCROLL FOR NEXT