தமிழக செய்திகள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்

வேளாங்கண்ணியில் தனியார் சொகுசு விடுதியில் விஜய் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற 4-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 28-ந்தேதி அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் வழங்கப்பட்டது. அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று இரவே அவர் வேளாங்கண்ணிக்கு புறப்பட இருக்கிறார். வேளாங்கண்ணியில் தனியார் சொகுசு விடுதியில் விஜய் தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேளாங்கண்ணியின் சிறப்பு பிரார்த்தனையை முடித்துக்கொண்டு விஜய் நாகூர் தர்காவில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்.