தமிழக செய்திகள்

திருச்செந்தூரை தொடர்ந்து ஷீரடி செல்லும் த.வெ.க. தலைவர் விஜய்

விஸ்வரூப தரிசனத்தின் போது, தன்னை பார்க்க வரும் பக்தர்களுக்கு வேண்டியதை கடவுள் அருள்புரிவார் என்பதும் ஐதீகம்.

சென்னை:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க. 233 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்டுள்ளது. அதில், கட்சியின் தலைவர் நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வருகிற மே 4-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று பிரசாரங்களை மேற்கொண்டதால் ஏற்பட்ட களைப்பை போக்க வெளிநாட்டு சுற்றுலாத் தலங்கள், உள்நாட்டு கோடைவாழ் தலங்களுக்கு சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர். ஆனால், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தனது முக்கியமான தருணங்களில் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் வருகிற 4-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ள தனது கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும், தாம் முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு கடல் குளித்து முடித்துவிட்டு அதிகாலையில் நடைபெற்ற முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் சார்பில் நடிகர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதே போன்று செந்தூர் முருகனின் நினைவாக அவருக்கு வேல் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் முருகனை அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் செய்வதால், பகைவர்களின் சதி மற்றும் பயம் நீங்கி, வீரமும், தைரியமும் பெருகும் என்றும், கையில் வேலுடன் இருக்கும் முருகனை தரிசனம் செய்வதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும் என்றும் ஐதீகம் கூறுகிறது.

விஸ்வரூப தரிசனம் என்பது, பொதுவாக காலையில் கடவுள்களுக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அபிஷேகம் நடைபெறுவதற்கு முன், முந்தைய நாள் அலங்காரத்தில் கடவுளை தரிசிப்பதே விஸ்வரூப தரிசனம் என்று சொல்லப்படுகிறது. இந்த விஸ்வரூப தரிசனத்தின் போது, தன்னை பார்க்க வரும் பக்தர்களுக்கு வேண்டியதை கடவுள் அருள்புரிவார் என்பதும் ஐதீகம்.

இத்தகைய சிறப்புமிக்க விஸ்வரூப தரிசனமாக திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கும் நடிகர் விஜய் அடுத்ததாக தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்ய இருப்பதாக த.வெ.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.