தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் இன்று விஜய் ‘ரோடு ஷோ’

6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் ரோடு ஷோவாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அவர் இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விஜய், விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக மதியம் கன்னியாகுமரி வருகிறார்.

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான எஸ்.ஆர். மாதவன் தலைமையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் ரோடு ஷோவாக சென்று வாக்கு சேகரிக்கிறார். மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை அவர் ரோடு ஷோ செல்கிறார்.

இந்த பிரசாரம் முடிந்ததும் அவர், மீண்டும் கார் மூலம் தூத்துக்குடி செல்கிறார். த.வெ.க. தலைவர் விஜய் மாலை தான் கன்னியாகுமரி வருகை தருகிறார் என்றாலும், காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் மகாதானபுரம் முதல் ஜீரோ பாயிண்ட் வரையிலான சாலையில் திரண்டனர்.

குழந்தைகள் உள்பட பொதுமக்கள் திரண்டதால் சாலையின் இருபுறங்களிலும் கூட்டம் அலைமோதியது. த.வெ.க. பெண் நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் கொடியை ஏந்தியும், கட்சி துண்டுகளை அணிந்தும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மகாதானபுரம்-ஜீரோ பாயிண்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.