தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த ஆதரவை யார்-யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி விஜய் ஆளுநருக்கு மெயில் மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் ஆட்சி அமைப்பதற்கு தன்னை அழைக்க வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இதையடுத்து லோக் பவனில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்னை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், இதுவரை அவருக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அவர்களின் ஆரம்பகட்டத் கடிதத்தில், தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீத விவரங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதைய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் துல்லியமான எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருக்கு இரண்டாவது கடிதம் தவெக தலைவர் விஜய் அனுப்பி உள்ளார். ஆளுநரின் அறிவுறுத்தலை ஏற்று முழுமையான விவரங்கள் அடங்கிய தகவல்களுடன் மீண்டும் விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.