தமிழக செய்திகள்

TN Assembly Election | திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

சென்னை பெரம்பூர் தொகுதியில் கடந்த 30-ந்தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.