தமிழக செய்திகள்

கடலூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் திடீர் ரத்து

த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கடலூர்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

நேற்று அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ராமநத்தம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய இருந்தார்.

இதற்கு போலீசார், 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் இன்று நடக்கும் பிரசாரத்திற்காக புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக கடலூர் வர இருந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாலும், விஜய் வருகையால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் வருகிற 11-ந் தேதி பிரசாரத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.