தமிழக செய்திகள்

TN Assembly Election | த.வெ.க. தலைவர் விஜய் நெல்லையில் நாளை பிரசாரம்

கே.டி.சி. நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

நெல்லை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. நாளை 8-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் மற்றும் ராஜகோபாலபுரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கே.டி.சி. நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

இதையடுத்து பிரசாரம் நடைபெற உள்ள கே.டி.சி. நகர் மைதானம் பகுதியை காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நெல்லையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.