தமிழக செய்திகள்

தி.மு.க.- அ.தி.மு.க.வை போல் த.வெ.க. தொழிற்சங்க பேரவை தொடக்கம்

தமிழக வெற்றிக்கழக தொழிற்சங்க பேரவை என்னும் பெயரில் தொடங்கப்பட இருக்கும் தொழிற்சங்க அமைப்பு முறைப்படி இன்று பதிவு செய்யப்பட்டது.

தி.மு.க.வில் தொ.மு.ச. பேரவை, அ.தி.மு.க.வில் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் சி.ஐ.டி.யூ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் நிர்வாகி கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போல் தமிழக வெற்றிக் கழகத்திலும் தொழிற்சங்கம் தொடங்கப்பட இருக்கிறது. தொழிற் சங்கம் தொடங்குவதற்காக கட்சி தலைவர் முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தொழிற்சங்க பேரவை என்னும் பெயரில் தொடங்கப்பட இருக்கும் தொழிற்சங்க அமைப்பு முறைப்படி இன்று பதிவு செய்யப்பட்டது.

விரைவில் த.வெ.க. தொழிற்சங்க பேரவை பிரிவை த.வெ.க. தலைவர் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட இருக்கிறார்.

சமீபத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவையில் இருந்து கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க.வில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என பல்வேறு அணிகள் இருக்கும் நிலையில் தொழிற் சங்கமும் தொடங்க இருப்பதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி எழுந்துள்ளது.