ஆளுநரை சந்தித்த திமுக, பாஜக வளர்ச்சிக்கு துணைபுரியும் செயல்பாடுகளை மேற்கொள்வதாக த.வெ.க. குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள்! என்று கூறியுள்ளது.